வாவ்! சூப்பர்!! அஞ்சலக சேமிப்பு வட்டி விகிதங்கள் அதிகரிப்பு..!

கோவை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மத்திய அரசு அஞ்சலக சேமிப்பு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வானது 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து கோவை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வை தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகபட்சமாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திர சேமிப்பு திட்டத்தில் வட்டியானது 7.2 சதவீதமாக உயர்த்தப்பட்டு முதலீடானது 120 மாதங்களில் இரட்டிபடைகிறது. மேலும் வருமான வரி விலக்கு பெற ஏதுவான திட்டங்களை 5 வருட வைப்பு நிதி கணக்கு, 5 வருட தேசிய சேமிப்பு பத்திர கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்றவற்றில் வட்டி விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு காலத்தில் மக்கள் அனைவரும் அவர்களுக்கு ஏதுவான சேமிப்பு திட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி மிகுந்த பயனடையும் படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.