வாவ்! சூப்பர்!! நத்தம் அருகே வறுமையிலும் சாதனை படைத்த மாணவி.!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி – ராஜ திலகம் இவர்களது மகள் கோதைநாயகி மதுரை ஶ்ரீராம் நல்லமணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமிகுதியால் எட்டாம் வகுப்பு முதல் கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். அன்று முதலே பள்ளியின் சார்பில் நடத்தப்படும் அனைத்து கால்பந்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்று தனக்கென தனி முத்திரை பதித்து வட்டார அளவில் பல பரிசுகளும் பின்னர் மாவட்ட அளவில் பங்கு பெற்ற போட்டிகளில் வென்று இருபதுக்கும் மேற்பட்ட பரிசுகளும் பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் பெற்று இந்திய பள்ளிக் குழுமம் நடத்தும் கால்பந்தாட்ட தெரிவுப் போட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19 வயது பிரிவு மாணவிகளுக்கான போட்டி நடைபெற்றது. மாநில அளவிலான கால்பந்தாட்ட தெரிவுப் போட்டியில் கலந்து கொண்டு தேர்வு பெற்றுள்ளார். இதன் மூலம் பஞ்சாபில் நடக்கும் தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு அணிக்காக கலந்து கொண்டு விளையாடவுள்ளார். தமிழக கால்பந்து அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இம்மாணவி தேசிய அணிக்கும் தேர்வு பெற வாய்ப்புள்ளது. 5 வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் மட்டும் வாழ்ந்து வரும் இம்மாணவி தாயின் வறுமையை கருதி தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் இல்லாமல் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் சொல்லித் தரும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு ஆர்வம் மிகுதியால் இந்நிலைமைக்கு உயர்ந்துள்ளார். மாவட்ட நிர்வாகமும் அரசும் இவருக்கு உதவி செய்யும் பட்சத்தில் எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து கால்பந்தாட்டத்தின் மீது ஏற்பட்ட தீராத ஆர்வம் கொண்ட இம்மாணவி தேசிய அளவில் கால்பந்து அணியில் பல சாதனைகள் படைப்பார்.