இந்தியாவிலேயே முதன் முறையாக தனுஷ்கோடி கடலில் காற்றாலை மின் உற்பத்தி: தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் டெண்டர் வெளியிட்டது.!

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடியில் அமையவுள்ள கடல் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான டெண்டரை தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஒன்றிய எரிசக்தித் துறை சார்பில் இந்தியாவில் 7,600 கிலோ மீட்டர் நீள கடற்கரை பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழகத்தில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மணிக்கு 29 கி.மீ. வேகத்திலும், குஜராத் மாநிலத்தில உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுவது தெரிய வந்தது.

இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தது. இந்த திட்ட அறிக்கையின் படி தமிழகத்தில் கடல் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க கடந்த 18ம் தேதி தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் டெண்டர் அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 15ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த ஏலத்தில் சர்வதேச நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் மூன்று இடங்களில் கடல் காற்றாலையை நிறுவ உலகளாவிய டெண்டர் விடபட்டுள்ளது. அந்த வகையில் அவர்களுக்கான பல்வேறு நெறிமுறைகள் தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தால் வகுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் கடலில் காற்றாலை நிறுவதற்கான திட்டங்கள் குறித்து ஆராய கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் குழு இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. அங்குள்ள கிரிம்ப்ஸி வடக்கு கடல் பகுதியில் கடலில் நகரும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தை ஆய்வு செய்தனர். அதே போல் தமிழக கடல் பகுதியில் நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகளை ஸ்காட்லாந்து மின் உற்பத்தித்துறை நிபுணர்களிடம் விரிவாக ஆலோசனை செய்தனர். இந்நிலையில் தான் தற்போது தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தால் கடல் காற்றாலைக்கான உலகளாவிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டுக்குள் தனது ஆற்றல் தேவைகளில் 50% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு பூர்த்தி செய்வதாக, புதிய காலநிலை உறுதிமொழியை கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி அறிவித்தது.

இந்தியா தனது தேசிய கடல் காற்று ஆற்றல் கொள்கையை உருவாக்கி 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. மேலும், குளோபல் விண்ட் எனர்ஜி கவுன்சில் கடந்தாண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த கடல் காற்று நிறுவனங்களில் முன்னணியில் இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் இருந்து வருகிறது. வரும் 2050 ஆம் ஆண்டில் உலகளாவிய கடல் திறன் 2,000 ஜிகாவாட்டை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் கடல் காற்று மின்சாரம் 140 ஜிகாவாட்டாக இருக்கும் என்று ஐரோப்பிய யூனியன் மற்றும் ஃபேசிலிடேட்டிங் ஆஃப்ஷோர் விண்ட் இன் இந்தியா திட்டத்தின் முந்தைய அறிக்கை மதிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், இந்தியாவில், 36 ஜிகாவாட் கடலோர காற்றாலை ஆற்றல் திறன் குஜராத்தின் கடற்கரையிலும், 35 ஜிகாவாட் தமிழ்நாடு கடற்கரையிலும் உள்ளது என்று இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதனால், இந்தியாவில் தமிழகம் மற்றும் குஜராத்தில் அமையவுள்ள கடல் காற்றாலை மூலம் மின் உற்பத்தி என்பது வரும்காலங்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.