கம்யூனிஸ்ட்டுகள் எடுத்த முடிவை நாங்க ஏன் எடுக்கணும்

கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் முடிவை விசிக எடுக்கும் என்று நாங்கள் சொல்லவில்லை என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

தவெக அரசுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பான விவகாரத்தில் கம்யூனிஸ்ட்களின் முடிவுகளை ஒட்டி விசிக முடிவு எடுக்கும் என்று மட்டுமே கூறியதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவை மட்டுமே எடுப்பதற்கு ஏன் விசிக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்ற நிலையில், பின்னர் கூட்டணியிலும் இணைந்தது. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விசிகவும் இணைந்தது. இதன்பின் மதிமுக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் இணைந்தன. ஆனால் அமைச்சரவையில் இணைவதற்கு முன்பு வரை, கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாட்டிலேயே விசிக இருக்கும் என்று திருமாவளவன் கூறி வந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அரசியல் ரீதியாக விசிக இணைந்தே பயணிக்கும் என்றும் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தனித்து களமிறங்கி இருக்கிறது. ஆனால் விசிக கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காமல், தவெக தரப்புக்கு ஆதரவு அளித்துள்ளது.

இதனால் விசிக மீதான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி வெல்லும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். அதனை தான் நாங்கள் வழிமொழிகிறோம். அதேபோல் 2 தொகுதி மக்களும் நிச்சயமாக வழிமொழிவார்கள். இது தேர்வு முடிவு வந்த பின் தெரியும்.

வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு என்பது திட்டமிட்டு கட்டமைக்க கூடிய குளறுபடி தான். எதிர்ப்பை விட வரவேற்பு தான் அதிகமாக இருக்கிறது. எந்த இடத்திலும் எதிர்ப்பு இல்லை. அதேபோல் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இடதுசாரிகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதனையொட்டி தான் விசிக முடிவு எடுக்கும் என்று திருமாவளவன் கூறி இருந்தார்.

அதற்காக அனைத்து முடிவுகளையும் அவர்களை பின்பற்றி முடிவு எடுப்போம் என்று சொல்லவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவை எடுப்பதற்கு ஏன் விசிக இருக்க வேண்டும். விசிகவும் ஒரு இடதுசாரி கட்சி தான். எங்களுக்கு என்று ஒரு கட்சி, ஒரு கொடி, ஒரு தலைவர் இருக்கிறார். நாங்கள் தான் எங்களின் முடிவை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் விசிக தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தவறாக சொல்லப்பட்டு வருகிறது. அதேபோல் ஆர்டிஐ அரசாணை ரத்து விவகாரம் தொடர்பாக தவறை சுட்டிக் காட்டியதும் பிடிவாதம் இல்லாமல் திரும்பப் பெற்றது வரவேற்கத்தது. இதுவொரு முதிர்ச்சியான அணுகுமுறை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.