சரண்ஜித்சிங் சன்னியை வேட்பாளராக அறிவித்த ராகுல் காந்தி..!

லூதியானா: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அறிவித்தார்.

அதேநேரத்தில் சரண்ஜித்சிங் சன்னியைத்தான் பஞ்சாப் மக்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகிறார்கள்; ஒரு தலைவர் என்பவர் 10-15 நாளில் உருவாகக் கூடியவர் அல்ல என மறைமுகமாக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு அடம்பிடித்துக் கொண்டிருந்தவரான நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் டோஸ் விட்டார் ராகுல் காந்தி.

117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ல் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் சரண்ஜித்சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு ராகுல் காந்தி பேசியதாவது: அரசியல் தலைவர்கள் என்பவர்கள் 10-15 நாட்களில் பிறப்பவர்கள் இல்லை. அரசியல் தலைவர்கள் என்பவர் டிவி விவாதங்கள் மூலம் உருவாகிறவர்கள் இல்லை.

முதல்வர் வேட்பாளர் குறித்து நான் எதனையும் முடிவு செய்யவில்லை. பஞ்சாப் மக்கள், இளைஞர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரது கருத்தையும் கேட்டோம். எனக்கு சில கருத்துகள் இருக்கலாம். ஆனால் அதனை விட உங்களது கருத்துகள்தான் எனக்கு மிக முக்கியம்.

பஞ்சாப் மக்களைப் பொறுத்தவரை ஏழைகளை புரிந்து கொள்ள கூடிய ஒருவர்தான் தேவை என கூறினர். நான் 2004-ம் ஆண்டு முதல் அரசியலில் இருக்கிறேன். நான் அப்படி ஒன்றும் அரசியலை அளவுக்கு அதிகமாக கற்றுக் கொள்ளவில்லை. கடந்த 6,7 ஆண்டுகளாக அரசியலை கற்று வருகிறேன். அரசியல் என்பது மிக எளிதான பணி என நினைக்கின்றார்கள். அது மிகவும் தவறானது. அரசியல் விமர்சகர்கள் நிறைய பேர் இருக்கலாம். ஆனால் அரசியல் தலைவராக உருவெடுப்பது அப்படி ஒன்றும் அளிதானது அல்ல. டூன் பள்ளியில் படிக்கும் போது 40 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் வீரராக சித்துவை சந்தித்திருக்கிறேன்.

ஏழை குடும்பத்தில் பிறந்தவர் சரண்ஜித்சிங் சன்னி. அவருக்கு வறுமை என்ன என்பது தெரியும். அவரிடம் அகம்பாவம் இருப்பதை நீங்கள் யாரேனும் பார்த்திருக்கிறீர்களா? அவர் மக்களிடம் செல்கிறார்… மக்களை சந்திக்கிறார்.. ஏழைகளின் குரலாக ஒலிப்பவர் சரண்ஜித்சிங் சன்னி. பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரும் பாஜகவின் பிரசார பீரங்கிகள். பிரதமர் மோடி எப்போதாவது மக்களை சந்தித்திருக்கிறாரா? சாலைகளில் செல்கிறவர்களுக்கு பிரதமர் மோடி உதவி செய்து பார்த்திருக்கிறீர்களா? அவர் ஒரு மன்னரைப் போல செயல்படுகிறார். அதனால் யாருக்கும் எந்த பயனுமே இல்லை. நவ்ஜோத்சிங் சித்து உணர்வுப்பூர்வமானர். அதனால் என்ன? இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.