எம்புட்டு அறிவு… குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் அபராதம் போடனும்.. தள்ளிட்டு வந்தா ஃபைன் போடக்கூடாது.. போலீசிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்..!

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் தான் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்ததற்கெல்லாம் அபராதம் விதிக்கக் கூடாது என்றும் இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது சூளைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சத்யராஜ் மற்றும் வினோத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

இதனை உறுதி செய்வதற்காக பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்ய முயன்ற போது இருவரும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, சத்யராஜ், தனது மனைவி அக்‌ஷயா வை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வர வைத்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த அக்‌ஷயா , காவல் உதவி ஆய்வாளரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்தால் மட்டுமே ஃபைன் போட வேண்டும் எனவும், வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்ததற்கெல்லாம் ஃபைன் போடக்கூடாது எனவும் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எம்பி-ஐ அழைத்து வர வேண்டுமா? எம்எம்ஏ-வை அழைத்து வர வேண்டுமா? என்று கேள்வி கேட்ட அக்‌ஷயா, போலீஸ்காரர்கள் எல்லாருமே ஃபிராடு தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் காவலர் ஒருவரையும் அவர் தாக்கியுள்ளார். இந்த விவகாரத்தில், காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யராஜ், அவரது மனைவி அக்‌ஷயா, நண்பர் வினோத் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.