அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரா இருந்தா என்ன..? டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் என்பதற்காக எந்த சலுகையும் காட்ட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜாமீன் மனுவை வெறும் தள்ளுபடி மட்டும் செய்யாமல் 20 நிமிடங்கள் தீர்ப்பை வாசித்து அதில் பல்வேறு அதிரடியான விஷயங்களை நீதிபதி ஸ்வர்ண கந்த ஷர்மா தெரிவித்திருந்தார்.

இன்று ஜாமீன் கிடைத்துவிடும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எப்படியும் பிரச்சாரம் செய்ய வருவார் என நம்பிக்கையுடன் காத்திருந்த ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே விஞ்சியது.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டாலும் அவர் முதல்வராகவே தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை எதிர்த்து தனக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மதியம் கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீது நீதிபதி ஸ்வர்ண கந்த ஷர்மா இன்று தீர்ப்பை வாசித்தார். அவர் சுமார் 20 நிமிடங்கள் வாசித்தார். அதில் நீதிபதி கூறுகையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் கெஜ்ரிவாலுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது உறுதியாகிவிட்டது. காணொலி மூலம் ஆஜராக ஒப்புக் கொண்டதாக கெஜ்ரிவால் தரப்பினர் வாதத்தை ஏற்க முடியாது.

அதாவது தன்னை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதை குற்றம்சாட்டப்பட்டவர் முடிவு செய்ய முடியாது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதும் அவரை அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பியதும் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவே தவிர தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது.

நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள், அவர்கள் அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்றப்பட்டவர்கள், நீதித் துறையின் சுதந்திரம் என்பது அரசியல் செல்வாக்கில் இருந்து விலகி இருப்பதுதான். எனவே முதல்வர் என்பதற்காக கெஜ்ரிவாலுக்கு எந்த சிறப்பு சலுகையும் காட்ட முடியாது.

மேலும் இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் வழக்கு என கெஜ்ரிவால் தரப்பு சொல்கிறது. அதாவது இந்த வழக்கு கெஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான சண்டை கிடையாது. இது கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத் துறைக்கும் இடையேயான சட்ட விவகாரம். ஆதாரங்களின் படிதான் தீர்ப்பு வழங்க முடியும். எனவே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும், அது சட்டவிரோதம் அல்ல என கூறிய நீதிபதி, கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த மனு ஜாமீனுக்கானது இல்லை. மாறாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் என சொல்வதற்காகத்தான் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமற்றம் தள்ளுபடி செய்ததை தெடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.