என்ன கொடுமை… பாலித்தீன் காகிதத்தை சாப்பிடும் காட்டு யானை… ஷாக்கான சுற்றுலா பயணிகள்..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே  சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே காரில் சென்றவர்கள் காட்டு யானை நடந்து செல்வதை வீடியோ எடுத்தனர். வேகமாக நடந்த சென்ற காட்டு யானை சாலையோர வனப்பகுதியில் இருந்த பாலித்தீன் காகிதத்தை தும்பிக்கையால் எடுத்து சாப்பிட்டது. காரில் சென்றவர்கள் காட்டு யானையை பிளாஸ்டிக் காகிதத்தை சாப்பிட வேண்டாம் என சத்தம் போட்டனர். தற்போது இந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சாலையோர வனப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் காகிதங்களை வீசுபவர்களை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளதால் காட்டு யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் பாலிதீன் காகிதங்களைத் தின்று உயிரிழக்கும் அபாயம்  உள்ளதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்..