என்னது!! இளைஞர்களை அதிகளவு மது அருந்தச் சொல்லி ஊக்கப்படுத்தும் நாடு- இது தான் காரணம்..!!

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டின் அரசு தங்கள் நாட்டு இளைஞர்களை அதிகளவு மதுபானம் அருந்தச் சொல்லி வலியுறுத்தியுள்ளது.

அதற்காக உள்நாட்டு அளவில் போட்டிகளையும் நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’, ‘குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலனை கெடுக்கும்’ என மதுபானம் அருந்துவதற்கு எதிராக பல சொலவடைகள் உண்டு. நம் நாட்டில் விற்பனையாகும் மதுபான வஸ்துக்களில் ‘மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு’ என கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும். சில நாடுகளில் மது அருந்தவும், விற்பனை செய்யவும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டு அரசு தங்கள் நாட்டு இளைஞர்கள் அதிகம் மது அருந்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதோடு நாட்டில் மது நுகர்வை அதிகரிக்க தேசிய அளவிலான போட்டிகளையும் அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.

 ஜப்பான் நாட்டில் கரோனா தொற்று பரவலுக்கு பிறகு இளைஞர்கள் குடிப்பழக்கத்தை கைவிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் திரளான இளைஞர்கள் இந்த போக்கை கடைபிடித்துள்ளனர். அதனால், அந்த நாட்டில் இப்போது இளைஞர்களை காட்டிலும் நடுத்தர வயதினரும், மூத்த குடிமக்களும்தான் அதிகம் மது அருந்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அரசுக்கு இதனால் வரி வருவாயில் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை அந்த நாட்டின் தேசிய வரி முகமை அமைப்பு கண்டறிந்துள்ளது. அப்போது இளைஞர்கள் மது அருந்தாமல் இருப்பதுதான் காரணம் என தெரிந்து கொண்டதும், அதனை ஊக்குவிக்கும் வகையில் ‘The Sake Viva’ என்ற ஒரு பிரசார இயக்கத்தை முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம் 20 முதல் 39 வயது வரை உள்ள இளைஞர்கள் பீர், விஸ்கி மற்றும் ஒயின் போன்ற மதபான விற்பனைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் புரொபோசல் உடன் வருமாறு அழைப்பு கூட விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மது விற்பனையை அதிகரிக்க புதிய ஐடியாக்கள் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த 2020 நிதி ஆண்டில் ஜப்பான் அரசுக்கு கிடைத்த வரி வருவாயில் வெறும் 2 சதவீதம்தான் மது விற்பனையில் இருந்து கிடைத்துள்ளது. மது விற்பனை செய்ததற்கான வாரியாக வசூலானது மொத்தம் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்படுகிறது. அந்த நாட்டுக்கு மது விற்பனை மூலம் கடந்த 2016 வாக்கில் கிடைத்த வரி வருவாயை காட்டிலும் இது 13 சதவீதம் குறைவு என சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு குரலும் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இது கேலிக்குரிய செயல் எனவும் விமர்சனங்கள் எழுந்திருந்தது. உலக அளவில் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. மேலும், இந்த பிரசாரத்தில் ஜப்பான் நாட்டின் மருத்துவத் துறை பங்கு கொள்ளவில்லை எனவும், அந்தத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சாரம். மற்றபடி மக்களை அதிகளவு மது அருந்த சொல்லி வற்புறுத்தவில்லை என அந்த நாட்டு வரி முகமை விளக்கம் கொடுத்துள்ளது.