அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு : ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது-உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை: அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்கில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின்பேரில் இருதரப்பிலும் தலா 200 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி இபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், விருகை என்.ரவி, அசோக், சத்யநாராயணன் உள்ளிட்ட 37 பேர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதையடுத்து 37 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதேபோல, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பிலும் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது இந்த வழக்கில் போலீஸார் பதிலளிக்கும் வரை இருதரப்பிலும் மனுதாரர்கள் யாரையும் கைது செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ள நீதிபதி, விசாரணையை ஆக.30-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.