சிஏஏ சட்டதை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் – பினராயி விஜயன் திட்டவட்டம்.!!

திருவனந்தபுரம்: கேரளாவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படாது என்றும், இந்த விவகாரத்தில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டமானது (சிஏஏ) மசோதாவாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இதற்கான சட்ட விதிகள் கடந்த ஆண்டு வரை இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு சட்டவிதிகள் இறுதி செய்யப்படாததால் இந்த சட்டம் செயலற்று கிடந்தது.

ஆனால், சமீபத்தில் இதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் சட்டம் அமலாக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் கடந்த 2014ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சமடைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, பார்சி, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் ஜெயின் போன்ற மத்தினை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

ஆனால், இதில் இலங்கை தமிழர்கள் குறித்தோ அல்லது இஸ்லாமியர்கள் குறித்தோ எவ்விதமான உறுதி மொழியும் கொடுக்கப்படவில்லை. இதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து 2009ம் ஆண்டிலிருந்தே ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக புலம் பெயர்ந்து வந்திருக்கின்றனர்.

இவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சிஏஏ சட்டத்தில் இது குறித்து எதுவும் பேசப்படாமல் இருப்பது தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதேபோல, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகள் குறித்தும் இந்த சட்டம் எதுவும் பேசவில்லை. எனவே இது பாரபட்சமான சட்டம் என்றும், இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக பாவிக்கும் சட்டம் என்றும் அம்மதத்தை சேர்ந்த மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் கேரளாவிலும், சிஏஏ அமலாக்கம் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், கேரளவில் சிஏஏ அமல்படுத்தப்படாது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் சட்டம் அமல்படுத்தப்படாது என்றும், இந்த சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும் எனவும் விஜயன் கூறியுள்ளார்.