எங்கள் மகள்களின் குங்குமத்தை அழித்தால்… என்ன நடக்கும் என்று உலகிற்கு காட்டி விட்டோம் – உறுதியாக சொன்ன பிரதமர் மோடி.!!

டெல்லி: ஆபரேஷன் சிந்தூரை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. கடந்த வாரம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், இதைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் அத்துமீறி இந்தியாவில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தொடங்கியது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே கூட தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகே மோதலை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. அதை இந்தியாவும் ஏற்கவே போர் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல்முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இரவு 8 மணிக்குத் தனது உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி, சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் பாதுகாப்புப் படையின் வெற்றி தொடர்பாகவும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயமானது என்று கூறிய பிரதமர் மோடி, மகள்களின் தாய்மார்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை உலகிற்கு நாம் காட்டியதாகத் தெரிவித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூருக்கு துணையாக நின்ற மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர், ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் மட்டுமில்லை மக்களின் உணர்வு என்றார்.

மே 7 காலை நமது மன உறுதியை உலகம் பார்த்ததாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் முழுவதையும் அழித்ததாக தெரிவித்தார். மேலும், மோதல் சமயத்தில் ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் அளித்ததாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயரல்ல. இது நாட்டில் உள்ள பல கோடி மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு. சிந்தூர் நடவடிக்கை நீதிக்கான ஒரு உறுதிமொழி. மே 6- 7ஆம் தேதி இந்தியாவின் பலத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது.

பயங்கரவாதிகளை ஒழிக்க இந்திய ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளோம்.. நமது மகள்கள், சகோதரிகளின் நெற்றியில் இருந்து குங்குமத்தை அகற்றினால் என்ன நடக்கும் என்பது இன்று ஒவ்வொரு பயங்கரவாதிகளுக்கும், ஒவ்வொரு பயங்கரவாத அமைப்புக்கும் தெளிவாகப் புரிந்திருக்கும்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை இந்தியப் பாதுகாப்புப் படைகள் தாக்கின. இந்தியா இவ்வளவு பெரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்… இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்களைத் தாக்கியபோது, ​​பயங்கரவாதிகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் தைரியமும் நசுக்கப்பட்டது கடந்த சில நாட்களில் நாட்டின் திறமையையும் பொறுமையையும் நாம் அனைவரும் கண்டோம். அதீதத் திறனை வெளிப்படுத்திய ஆயுதப்படைகள், ராணுவம், உளவுத்துறை அதிகாரிகளை வணங்குகிறேன்” என்றார்.