இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்… நிதியமைச்சருக்கு அல்வா கொடுத்த ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

டெல்லி: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அப்போது அமைச்சருக்கு பாசத்துடன் இனிப்பு ஊட்டி விட்டு வாழ்த்து கூறினார்.

2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு முன்னதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை தனது குழுவினருடன் சந்தித்தார் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் குடியரசுத்தலைவரை நிதி அமைச்சர் சந்திக்கும் நிகழ்வு பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். அந்த பாரம்பரியத்தின் படி நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தனது நிதி அமைச்சக குழுவினருடன் சென்று சந்தித்து உரையாடினார்.

பொதுவாக நல்ல காரியம் செய்யும் முன்பாக இனிப்புடன் தொடங்குவது மரபு. அதன்படிதான் பாரம்பரியமாக அல்வா கிண்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் தன்னை சந்திக்க வந்த நிதியமைச்சருக்கு இனிப்பு ஊட்டி விட்டு வாழ்த்து கூறினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும்.

தொடர்ந்து 6 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்…