அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து திங்கள்கிழமை(அக்.28) தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் என 600-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளை மாளிகையில் உள்ள நீல அறையில் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த அதிபர் ஜோ பைடன், ‘தெற்காசிய அமெரிக்க சமூகம், அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஆற்றி வரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டியதுடன் நன்றியும்’ தெரிவித்துக் கொண்டார்.
இந்திய வம்சாவளியினருடன் அதிபர் ஜோ பைடன் பேசியதாவது, “ஒரு அதிபராக, வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் தீபாவளி விருந்தளித்திடும் மாபெரும் கௌரவம் எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பொருத்தவரை, இது பெரிய விஷயம். அமெரிக்க அரசு நிர்வாகத்தில் உறுப்பினர், துணை அதிபர், அதிபர்… இப்படி எனது நிர்வாகத்தின்கீழ் பல முக்கியப் பொறுப்புகளிலும் ஆசிய அமெரிக்க மக்கள் உள்ளனர்.
கமலா ஹாரிஸ் முதல் டாக்டர் விவேக் மூர்த்தி வரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் இன்று இங்கு கூடியுள்ளனர். அமெரிக்காவில் சிறப்பானதொரு நிர்வாகம் நடைபெறுவதன் மூலம் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளேன் என்ற பெருமித உணர்வு என்னிடம் இப்போது உள்ளது” என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பிரச்சார பணிகள் காரணமாக, இந்நிகழ்ச்சியில் அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் (ஆளும் ஜனநாயகக் கட்சியின் தற்போதைய அதிபர் வேட்பாளர்) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.