தற்போதைய உலக வரைபடத்தில் உள்ள தவறுகளைத் திருத்தி மிகத் துல்லியமான புதிய வரைபடம் வெளியிடக் கோரும் ஐ.நா. பொதுச் சபை தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
193 நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் டோகோ நாடு முன்மொழிந்த இந்தத் தீா்மானத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 164 நாடுகள் வாக்களித்தன.
எஸ்டோனியா, ஜாா்ஜியா, லித்துவானியா, மால்டோவா, சொ்பியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், தீா்மானத்துக்கு எதிராக அமெரிக்கா மட்டுமே வாக்களித்தது.
மொ்காதோா் என்ற புவியியலாளா் 16-ஆம் நூற்றாண்டில் கடல் வழிப் பயணங்களுக்காக உருவாக்கிய உலக வரைபடமே கல்வி, ஊடகம், எண்ம மற்றும் அதிகாரபூா்வ பதிவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வரைபடம் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளை சிறியதாகவும், தொலைவில் உள்ள நாடுகளை மிகப் பெரிதாகவும் காட்டுகிறது.இதனால் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசிய பகுதிகளின் பரப்பளவு சிறியதாக காட்சியளித்து சமநிலையற்ற உலகப் பாா்வையை ஏற்படுத்துகிறது. எனவே, பல்வேறு தவறுகளுடன் காட்சியளிக்கும் பழைய உலக வரைபடத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு புதிய வரைபடத்தை தயாரித்து வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தீா்மானத்தை வரவேற்று ஐ.நா.வுக்கான நிரந்தர இந்தியக் குழுவின் முதல் செயலா் ரகு புரி பேசியதாவது: உலக புவியியல் மற்றும் பிற நாடுகள் குறித்து சமூகம் புரிந்துகொள்வதில் வரைபடங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தத் தீா்மானம் கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களின் உண்மையான பரப்பளவை பிரதிபலிக்கும் சம பரப்பு வரைபடத்தை உருவாக்கவே கோருகிறது என்று இந்தியா நம்புகிறது.புதிய வரைபடத்தால் நாடுகளின் வடிவம், திசை அல்லது தொலைவு ஆகிய அம்சங்கள் முறையாகப் பாதுகாக்கப்படும். எனவே, புதிய வரைபட வடிவமைப்பு தொழில்நுட்ப ரீதியாகவும், நடுநிலையாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கிறோம். அதனடிப்படையில் இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கிறது என்றாா். தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் அமெரிக்க துணைப் பிரதிநிதி யரீனா ஃபெரன்செவிச் பேசுகையில், ‘சா்வதேச அமைதி, வளமை, நல்லுறவு போன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக 16-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட வரைபடத்தை மாற்றியமைப்பதில் ஐ.நா.கவனம் செலுத்துவது ஏற்புடையதல்ல; ஐ.நா. அமைப்பு மீதான நம்பகத்தன்மையை இழக்க இதுபோன்ற தீா்மானங்களே காரணம்’ என்றாா்.
புதிய உலக வரைபடம் – ஐ.நா. தீா்மானம்





