புதிய தொழில் தொடங்கணுமா.. 21 நாள்களில் அனுமதி

மிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பித்த 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவதையோ, அனுமதிக்காகக் காத்திருப்பதையோ மக்கள் விரும்புவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தொழில் தொடங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது தாமதங்கள் ஏற்பட்டால், அதுகுறித்து தனக்கும், முதலமைச்சருக்கும் நேரடியாகப் புகார் தெரிவிக்கும் வகையில் ‘நேரடி குறைதீர்க்கும் கட்டமைப்பு’ உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.மாநிலம் முழுவதும் விரைவான தொழில்துறை மண்டலங்கள் அமைக்கப்படும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த நகரம் உருவாக்கப்படும், மின்வாகன உற்பத்தியும், டிரோன் உற்பத்திக்கான தனி வழித்தடமும் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் விண்வெளித் துறை மற்றும் பசுமை ஹைட்ரஜன் சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, தொழில் முதலீட்டாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.