தொப்பையை குறைக்கணுமா..? அப்ப சோம்பை தினமும் இந்த மாதிரி சாப்பிடுங்க போதும்…

நம் வீட்டின் சமையலறையில் உள்ள பல பொருட்கள் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.

அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் தாங்கள் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் கை வைத்தியம் பார்த்தார்கள். அதில் அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் சோம்பு. இதை பெருஞ்சீரகம் என்றும் அழைப்பார்கள். இந்த சோம்பு பரவலாக வாய் புத்துணர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

இப்படிப்பட்ட சோம்பு தன்னுள் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளதால், இன்று பெரும்பாலானோர் குறைக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உடல் பருமன் மற்றும் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? அதுவும் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் ஒருவரின் உடல் பருமனைக் குறைக்க சோம்பு உதவுகிறது. அதற்கு சோம்பை பலவாறு ஒருவர் உட்கொள்ளலாம். இப்போது உடல் பருமன் மற்றும் தொப்பையைக் குறைக்க சோம்பை எந்த மாதிரியெல்லாம் உட்கொள்ளலாம் என்பதைக் காண்போம்.

தேவையான பொருட்கள்:

* சோம்பு – 4 டேபிள் ஸ்பூன்

* ஓமம் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

* வெந்தயம் – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்

* ப்ளாக் சால்ட் – 1 டீஸ்பூன்

* தேன் – சுவைக்கேற்ப

தயாரிக்கும் முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ப்ளாக் சால்ட், தேன் மற்றும் பெருங்காயத்தை தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து குறைவான தீயில் வைத்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்க வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ப்ளாக் சால்ட், பெருங்காயத் தூள் மற்றும் தேன் சேர்த்து பொடி வடிவத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதை சிறு உருண்டைகளாக உருட்டி, கண்ணாடி ஜாரில் போட்டு, ஒரு நாளைக்கு ஒரு உருண்டையை சாப்பிட வேண்டும்.

2. சோம்பு நீர்

* ஒரு டம்ளரில் 1 டேபிள் ஸ்பூன் சோம்பை எடுத்து, அதில் சிறிது நீர் சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* பின் மறுநாள் காலையில் ஒரு டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ள சோம்பு நீரை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

3. சோம்பு டீ

தினமும் காலையில் எழுந்ததும் பால் கலந்த காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, ஒரு டம்ளர் சோம்பு டீ குடியுங்கள். அந்த சோம்பு டீயுடன் இஞ்சி மற்றும் புதினா சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்ல சுவையாக இருப்பதோடு, செரிமான பிரச்சனைகளையும் நீக்கும் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடையைக் குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

* சோம்பு – 1 டீஸ்பூன்

* இஞ்சி – 1/4 இன்ச்

* புதினா – சிறிது

* தேன் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சோம்பு, இஞ்சி சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின் அதில் புதினா இலைகளை சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து, பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்தால், சோம்பு டீ தயார்.

4. சோம்பு பொடி

சோம்பை சாப்பிடுவதற்கான மற்றொரு எளிய வழி தான் சோம்பு பொடி. அதற்கு சிறிது சோம்பு விதைகளை வாணலியில் போட்டு 2-3 நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, காற்றுப்புகாத கண்ணாடி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த பொடியை உணவு உண்ட பின் 1-2 சிட்டிகை சாப்பிட வேண்டும்.