திவாலாகி விட்ட அரசு… சுழன்று அடிக்கும் கடன்… ஐஎம்எப் நிபந்தனையை ஏற்றது பாகிஸ்தான்..!

ஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கடனை பெற அந்நாட்டு அரசு முயன்று வந்தது.

இந்நிலையில் தற்போது ஐஎம்எஃப்-ன் நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே கடன் தொகை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடியானது இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. பாகிஸ்தானின் அந்நிய செலாவணியானது அடுத்த மூன்று வாரங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் நிலை இருந்தபோது சில சிக்கன நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. அதன்படி ‘டீ’, குடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், பெட்ரோலுக்கான வரி உயர்வு என அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்தது.

அதே நேரம் அரசாங்க செலவுகளை குறைக்கும் விதமாக அரசு அதிகாரிகளுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் கணிசமான தொகை சேமிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு கூறியிருந்தது. அதேபோல எதிர்பார்த்ததை விட குறைவான தொகை சேமிக்கப்பட்டது. மறுபுறம் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய கடன் தொகைகள் ஓரளவு திரும்ப கிடைத்தது. எனவே இத்தனை நாட்கள் பொருளாதாரம் ஓரளவு ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு போன்றவை மக்களிடையே கோபத்தை அதிகரித்திருக்கிறது. எனவே நிலைமையை சமாளிக்க ஐஎம்எஃப் கடன் பெற்றால்தான் வேலைக்கு ஆகும் என்று பாகிஸ்தான் முடிவெடுத்தது. ஏனெனில் லாகூர், பைசலாபாத் மற்றும் குஜ்ரன்வாலா என சில முக்கிய நகரங்களில் பெட்ரோல் இல்லாததால் பங்குகளில் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் ஒரு சில பங்குகளிலும் குறைந்த அளவே இருப்பு இருப்பதால் பைக் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முறை ரூ.200க்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படுகிறது. இதனால் நீண்ட வரிசையில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர்.

அதுபோல மின்சாரமும் முறையாக கிடைக்காததால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இந்த சூழல் கையில் எடுத்து அரசியலாக்க முயன்ற வருகிறது. எனவே ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் ஐஎம்எஃப்-ன் கடன் முக்கியமானதாக இருக்கிறது. இக்கடன் மூலம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி பாகிஸ்தானுக்கு கிடைக்கும். இதனை கொண்டு நிதி நிலைமையை பலப்படுத்தலாம். ஆனால் ஐஎம்எஃப் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த கடன் கிடைக்கும். இதற்கு பாகிஸ்தான் அரசு கடந்த சில நாட்களாக ஒப்புதல் தெரிவிக்காமல் இருந்ததால் கடன் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

நிபந்தனைகளை ஏற்றால் அரசு மீண்டும் நெருக்கடியில் சிக்க நேரிடும். அதாவது, தற்போது வரை 300 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மாணிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மின்சார நிறுவனத்தின் கடன் மட்டுமே சுமார் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சுமார் 2.9 டிரில்லியன் அளவில் இருக்கிறது. இந்திய மதிப்பில் இது ரூ.88 கோடியாகும். அதேபோல குளிர்பானங்கள் மீதான வரியை 13லிருந்து 17 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்றும் ஐஎம்எஃப் பரிந்துரைத்திருக்கிறது. மேலும் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை உயர்த்தவும் ஐஎம்எஃப் நிபந்தனையிட்டிருக்கிறது.

இந்த நிபந்தனையெல்லாம் அமல்படுத்தினால் பெரும் சர்ச்சை எழும் என்பதால் இத்தனை நாட்கள் அரசு யோசித்து வந்தது. ஆனால், நிதி ஆதாரத்திற்கு வேறு வழியில்லை என்பதால் இந்த நிபந்தனைகளை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதனை அந்நாட்டின் நிதியமைச்சர் இஷாக் தார் உறுதி செய்துள்ளார். ஆனால் இந்த கடன் உடனடியாக கிடைக்காமல் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர்தான் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இக்கடன் காரணமாக தற்காலிகமாக பாகிஸ்தானுக்கு நெருக்கடியிலிருந்து மீள வாய்ப்பு கிடைக்கும்.