விஸ்வகர்மா யோஜனா திட்டம்… குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமா..?

பிரதமர் நரேந்திர மோடி தனது படாடோப திட்டங்களில் ஒன்றாக ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை ஞாயிறன்று துவக்கி வைத்திருக்கிறார். இளைஞர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுவதற்காக ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இத்திட்ட த்தில் இணைபவர்களுக்கு தொழில்சார்ந்த கரு விகளை வாங்க முதல் தவணையாக ரூ.1லட்சம் வரை வட்டியில்லா கடனும், அதை சரியாக திருப்பிச் செலுத்தினால் இரண்டாம் தவணையாக ரூ.2லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடனும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள இந்தத் திட்டம், பல்லாண்டுகளுக்கு முன்பு சாதிய ஆதிக்க ஆட்சியாளர்களால் அமலாக்கப்பட்ட ‘குலக்கல்வித் திட்டத்தின்’ மறு வடிவமே தவிர வேறல்ல.
இந்தியாவில் மோடி ஆட்சியில் வேலையின்மை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. 2014ல் மோடி ஆட்சிக்கு வரும் போது 5.44 சதவீத மாக இருந்த வேலையின்மை விகிதம் 2023ல் 7.95 சதவீதமாக அதிகரித்துள்ளது. 30 வயதிற்கு கீழ் உள்ள வேலை செய்யத்தக்க இளைஞர்களில் கிட்டத்தட்ட 53 சதவீதம் பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் வேலையின்மையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவோம் என்றும் உறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக, தனது 10 ஆண்டுகால ஆட்சியில் வேலையின்மையை குறைப்பதற்குப் பதிலாக 2.5 சதவீதத்திற்கும் மேலாக வேலையின்மையை அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட கால இடை வெளியில் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் சக்தி குறித்த கணக்கெடுப்பின்படி 2023 ஜனவரி – மார்ச் காலத்தில் நகர்ப்புறங்களில் 15 முதல் 29 வயது உள்ளவர்களிடையே நிலவும் வேலையின்மை 17.3 சதவீதம் ஆகும். நகர்ப்புற தொழிலாளர்களிடையே முழுநேர வேலை வாய்ப்பின் பங்கு 50.5சதவீதமாக குறைந்துள்ளது. இதன்படி நகர்ப்புறங்களில் வேலை செய்யத் தகுதிபடைத்த 15 கோடிப் பேரில் 7.3 கோடிப் பேருக்கு மட்டுமே முழுநேர வேலை வாய்ப்பு உள்ளது.
ரயில்வே உட்பட ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பல லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியிடங்கள் வெட்டி சுருக்கப்பட்டு வருகின்றன. இவற்றை நிரப்புவதற்கு துப்பில்லாத மோடி அரசு, எட்ட முடியாத இலக்கை, போகக் கூடாத பாதையில் சென்று எட்டுவதற்கு முயற்சிக்கிறது. விஸ்வகர்மா திட்டம், ‘விஸ்வ குருவின்’ மோசடி நாடகமும், சாதிய கட்ட மைப்பை பாதுகாக்கச் செய்யும் குரூரமுமே ஆகும்.