துணைவேந்தர்கள் நியமனம் விவகாரம்: நான் தலையிட்டதை நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் – கேரள ஆளுநர் ஆரிஃப் கான் சவால்..!

ல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தான் தலையிட்டதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் சவால் விடுத்துள்ளார்.

டெல்லி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் (நவ.2) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு செய்வதாகவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் ஆர்எஸ்எஸ்- சங் பரிவார் அமைப்புகளின் மையங்களாக மாற்றவும் ஆளுநர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்குப்பேட்டியளித்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.

அப்போது பேசிய அவர், “கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆர்எஸ்எஸ் நபர்களைக் கொண்டு வர நான் முயற்சிப்பதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆர்எஸ்எஸ்-காரர்கள் மட்டுமல்ல, எந்த ஒரு நபரையாவது, என் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொண்டு வர முயற்சித்தேன் என நிரூபித்தால், எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.

என் மீது இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டை வைத்த நீங்கள், அதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியவில்லை என்றால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா?. துணைவேந்தர்கள் நியமனத்தில் நான் இதுவரை தலையிடவில்லை. ஆனால், நான் தலையிட பல முக்கியப் பிரச்னைகள் உள்ளன. பல்வேறு கடத்தல் வழக்குகளில் முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் சிக்கியுள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால், இதில் நான் தலையிடவில்லை” என்றார்.