அரசு விழாவை அரசியல் மேடையாக்கிய முதல்வர் ஸ்டாலின் – வானதி சீனிவாசன் கடும் கண்டனம்.!!

கோவை தெற்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.

எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்து, திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி 64-வது வார்டு புலியகுளம் பெரியார் நகர், 82-வது வார்டு இஸ்மாயில் ராவுத்தர் வீதி, 67-வது வார்டு காந்திபுரம் நகர பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். 66-வது வார்டு புலியகுளம், தாமு நகரில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து மக்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சியில் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரிகமாக முதல்வர் பேசி இருக்கிறார். தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் மோடி அருகே ஸ்டாலின் அமர்ந்திருந்தார். நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என நான் விடுத்த கோரிக்கை குறித்து தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இலை வாடல் நோய் தாக்கிய தென்னை மரங்களை வெட்டி அகற்ற ரூ.10 கோடி நிதி வழங்கப்படும் என கூறுகிறார்.

ஒவ்வொரு முறையும் பொய் பேசி தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் திட்டம் செயல்படுத்தும் போது அதற்கு ஏதாவது ஒரு விதத்தில் தடையை தமிழக அரசு ஏற்படுத்தி கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டம் எந்த சிறுபான்மை சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல. அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் சிறுபான்மை மக்களை தூண்டி விடுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.