சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு வந்த கே.எஸ்.அழகிரி, குண்டுராவ் ஆகியோரை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவரான ஜெயக்குமாரை உடனடியாக நீக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அவர் பணத்தை வாங்கிக் கொண்டு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளதாக குற்றம்சாட்டினர். கூட்டம் முடிந்தபின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த கே.எஸ்.அழகிரி பேச்சு வார்த்தை நடத்தாமல் காரில் புறப்பட முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த நெல்லை காங்கிரஸ் நிர்வாகிகள் காரை முற்றுகையிட்டனர்.
அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. உருட்டுக்கட்டைகளை கொண்டு இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் சத்தியமூர்த்தி பவன் பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.