அக்னிபத் திட்டத்தை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு.!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஜம்மு காஷ்மீர்,டெல்லி,அரியானா,உத்தர பிரதேசம்,பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும்,தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மத்தியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.குறிப்பாக,பல பகுதிகளில் பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம்,பேருந்துகளை அடித்து நொறுக்கியும்,ரயில்களுக்கு தீ வைத்தும் இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,அக்னிபத் திட்டத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்து உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தால் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் தாக்கம் எவ்வாறு இருக்கும்,வேலை வாய்ப்பில் என்ன மாதிரியான பலன்கள் அல்லது எதிர்மறையான விசயங்களை கொடுக்கும் என்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் குறித்து விசாரிக்கவும்,ரயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிடக் கோரி டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் விசால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.இதனை வருகின்ற திங்கட்கிழமை அவசர வழக்காக எடுத்து உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.