அக்னிபத் வீரர்கள் தேர்வுக்கு 2 நாளில் அறிவிப்பாணை வெளியிடப்படும்-ராணுவ தலைமை தளபதி அறிவிப்பு.!

அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என அறிவிப்பு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு பயிற்சி டிசம்பர் மாதத்தில் மையங்களில் நடைபெறும் என்றும் செயலில் உள்ள சேவை 2023 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான குறைந்தபட்சம் 17.5 அதிகபட்ச வயது வரம்பு 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு குறித்த அறிவிப்பு 2 நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.