நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சென்னையில் உதித்த சூரியன்.!!

சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிய திமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிமுகத்தில் இருக்கிறது.

இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்ற பெருமையை பெற்றுள்ள சென்னை மாநகராட்சியில் சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் பலர் மேயர்களாக இருந்தாலும் கூட, 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு தான் மேயர் பதவி முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

அதற்கு முன்னர் ஆண்டுக்கு ஒருவர் என பலர் மேயராக இருந்திருந்தாலும் அந்தப் பதவிக்கான பவரும், முக்கியத்துவமும் ஸ்டாலின் மேயரான பிறகு தான் அதிகரித்தது.

கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு சென்னை மேயரானார் மு.க.ஸ்டாலின். சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றும் முனைப்போடு எண்ணற்ற திட்டங்களை மேயராக இருக்கும் போது கொண்டு வந்தார் ஸ்டாலின். அதிகாலையிலேயே ஆய்வுக்கு சென்று அதிகாரிகளை அலறவிட்டதோடு சென்னையில் இன்று கம்பீரமாக காட்சி தரக்கூடிய பல மேம்பாலங்களை கட்டியவரும் ஸ்டாலின் தான். தினமும் மாநகராட்சி அலுவலகத்தில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைத்த காரணத்தால் 2001-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் ஸ்டாலின் இரண்டாவது முறையாக சென்னை மேயரானார்.

இதனிடையே அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் ஸ்டாலின் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்த காரணத்தால், மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்தார். துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் (இவர் அப்போது காங்கிரஸில் இருந்தார்) 2002 முதல் 2006 வரை சென்னை மாநகராட்சியின் பொறுப்பு மேயராக பதவி வகித்தார்.

இதனிடையே 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த மா.சுப்ரமணியன் (இப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்) மேயராக வெற்றிபெற்றார். ஸ்டாலின் மேயராக இருந்தால் அவர் என்ன செய்வாரோ அதேபோல் மா.சுப்ரமணியனும் மிகவும் சுறுசுறுப்பாக மேயர் பதவியில் இயங்கி வந்தார். ஸ்டாலின் பாணியில் அதிகாலை ஆய்வு, மக்கள் குறைகளுக்கு தீர்வு என பெரிதாக குறை சொல்ல முடியாத அளவுக்கு செயல்பட்டார். இதனால் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மா.சுப்ரமணியன் மீண்டும் சென்னை மேயராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால் திமுக கவுன்சிலர்கள் ஒரு சிலரின் கட்டப்பஞ்சாயத்துக்கள் காரணமாக 2011 தேர்தலில் தலைநகரில் தோல்வியை தழுவியது திமுக. முதல்முறையாக தலைநகர் சென்னையின் மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியது. சைதை துரைசாமி சென்னை மாநகராட்சி மேயராக வெற்றிபெற்றார். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தின் போது கடும் விமர்சனங்களை சந்தித்தார் சைதை துரைசாமி. 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய சென்னை மாநகராட்சி தேர்தல் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் 6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் சுடச்சுட வெளி வந்துகொண்டிருக்கின்றன.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 150 வார்டுகளுக்கு மேல் கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திமுகவினர். அவர்களின் நம்பிக்கையை மெய்யாக்கும் வகையில் தேர்தல் முடிவுகளும் வெளி வந்துகொண்டிருக்கின்றன. இன்று பிற்பகலுக்கு மேல் சென்னை மக்களின் செல்லப்பிள்ளையாக எந்தக் கட்சி வரப்போகிறது என்ற விவரம் முழுமையாக தெரியவந்துவிடும்.

இதனிடையே, காலை 9.30 மணி நிலவரப்படி 1,8,15,49,181,59,94,196,174 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக ஒரு வார்டிலும் முன்னிலை பெறவில்லை.