ஹிஜாப் விவகாரம்: அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும்-அமித் ஷா கருத்து.!!

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, “அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் உடுப்பி, சிக்மகளூர், மங்களூர், ஷிவமொக்கா உள்பட பல பகுதிகளில் பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்து மாணவ அமைப்புகள் கல்லூரிக்கு சீருடை அணிந்து வர வேண்டும் என்றும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் காவித் துண்டு அணிவோம் என்று எச்சரித்தனர். அதன்படி ஹிஜாப்புக்கு எதிராக அவர்கள் கல்லூரிக்கு காவித் துண்டு அணிந்து வந்தனர். இதனால், கர்நாடக பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் கல்வி நிலையங்கள் உத்தரவு பிறப்பித்தன.

அதையும் மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் விட கல்வி நிறுவனங்கள் மறுத்தன. இந்த விவகாரம் தீவிரமானதையடுத்து நாடு முழுவதும் விவாதப் பொருளானது. கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அமித்ஷா பேட்டி அளித்துள்ளார்.

அதில், “அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடையை பின்பற்ற வேண்டும். அனைத்து மதத்தினரும் பள்ளி சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை ஆகும். தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அது என்ன தீர்ப்பை வழங்குகிறதோ அதை அனைத்து மதத்தவரும் பின்பற்ற வேண்டும்” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.