உச்சகட்ட பரபரப்பில் கோவை.. 17 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை.. பாதுகாப்பு பணியில் 3800 போலீசார் குவிப்பு.!!

கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்த கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் பதிவான ஓட்டுகள் 17 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தல் மூலம் மாநகராட்சியில் 1,369 வார்டுகள், நகராட்சியில் 3,824 வார்டுகள், பேரூராட்சியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வாகி இருந்தனர்.

இந்நிலையில் பிப்ரவரி 19ல் விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஓட்டளித்தனர். 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் 279 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள 802 பதவிகளுக்கு பிப்ரவரி 19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் 17 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழிநுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது. இதுதவிர பிற நகராட்சி, பேரூராட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் ஓட்டு எண்ணும் மையங்ளில் வேட்பாளர்கள், முகவர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

பாதுகாப்பு கருதி கோவை மாநகரில் 2400 போலீசார், புறநகர் பகுதியில் 1460 போலீசார் என மொத்தம் 3860 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு வேட்பாளருக்கு 3 முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது கோவை மாநகரில் திமுகவினர் அராஜக செயலில் ஈடுபடுவதாக அதிமுக, பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும் கரூர் பகுதியை சேர்ந்தவர்கள் கோவையில் முகாமிட்டுள்ளதால் துணை ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நேர்மையாக தேர்தல் நடத்த துணை ராணுவம் அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதை மாநில அரசு புறக்கணித்த நிலையில் மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்பட அதிமுகவினர் கோவை கலெ க்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.