லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இன்று பதவியேற்கிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 50 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
உத்தர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக கூட்டணி 273 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் லக்னோவில் நேற்றுநடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மேலிட தலைவர்களும் பங்கேற்றனர். அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் பெயரை எம்எல்ஏக்கள் பரிந்துரைக்கலாம்” என்று அழைப்பு விடுத்தார். அப்போது ஷாஜகான்பூர் எம்எல்ஏ சுரேஷ் கன்னா எழுந்து யோகி ஆதித்யநாத்தின் பெயரை பரிந்துரைத்தார். இதை அனைத்து எம்எல்ஏக்களும் ஆமோதித்தனர் இதையடுத்து அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, லக்னோவில் அமைந்துள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் யோகி ஆதித்யநாத் 2-வதுமுறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி 45 பேர்அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், பாஜக மூத்த தலைவர்கள், தொழிலதிபர்கள், ஆன்மிக தலைவர்களும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உட்பட 60 தொழிலதிபர்களுக்கும் பாலிவுட் முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படஇயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, நடிகர் அனுபம்கெர் உள்ளிட்ட படக்குழுவினரும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 50,000 பேர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.-பிடிஐ
Leave a Reply