சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு’ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு புதுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வி கட்டமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இலவச பாடநூல்கள் விநியோகம், மிதிவண்டிகள் வழங்குதல், திறன் வகுப்பறைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படு கின்றன.மேலும், காலை உணவுத் திட்டம், வெளிநாட்டு கல்விச் சுற்றுலா, எண்ணும் எழுத்தும், பசுமை பள்ளிகள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மாணவர்களின் கல்வித்திறனை மேலும் வலுப்படுத்துகின்றன.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியே 43 ஆயிரம் செலவில், `கற்றனைத் தூறும் அறிவு சிலை’ அமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக பள்ளிக்கல்வியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்,செயல்பாடுகள் wகுறித்த `கற்றனைத் தூறும் அறிவு – சாதனைச் சரித்திரம்’ எனும்நூலையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்விஇயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.







