ஆசை ஆசையாய் டெல்லி சென்றார்… ஏமாற்றத்துடன் திரும்பிய எடப்பாடி… நடந்தது என்ன..?

சென்னை: டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மோடி, அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை. இதனால், தனது டெல்லி பயணத்தை பாதியில் முடித்து கொண்டு அவசரம், அவசரமாக எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை திரும்பினார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால், அதிமுக தலைமை அலுலகத்துக்கு எடப்பாடி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அந்த சீல் அகற்றப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதம் காலத்துக்கு கட்சி அலுவலகத்திற்குள் நிர்வாகிகளை அனுமதிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொதுக்குழுவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிரடியாக நீக்கினார். பதிலுக்கு ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளை நீக்கினார். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். எடப்பாடி, ஓபிஎஸ் மோதலால் அதிமுக 2 ஆக உடைந்துள்ளது. அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவடைந்தது. அவருக்கு பிரிவு உபசார விழா டெல்லியில் 23ம் தேதி(நேற்று முன்தினம்) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி கடந்த 22ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி செல்லும்போது அதிமுக முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை அழைத்து செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களை புறக்கணித்து விட்டு எஸ்.பி.வேலுமணியை மட்டும் உடன் அழைத்து சென்றார். இதனால், மூத்த தலைவர்கள் எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். டெல்லி சென்ற எடப்பாடி அங்கு 6 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டிருந்தார். 26ம் தேதி சென்னை திரும்பும் வகையில் பயணம் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ெடல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசவும் திட்டமிட்டிருந்தார். சந்திக்கும் பட்சத்தில் அவர்களிடம் ஓபிஎஸ் குறித்து பல்வேறு புகார்களை அளிக்க அவர் திட்டமிட்டிருந்தார். கட்சியில் 95 சதவீதத்துக்கும் மேல் நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், கட்சியில் ஓபிஎஸ் எந்த குறுக்கீடும் செய்யாமல் இருக்க உதவ வேண்டும்’ என்றும் வலியுறுத்த திட்டமிட்டிருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள், அவரது உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சோதனைகளை நிறுத்த வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழா நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது பிரதமரை கையெடுத்து கும்பிட்டு வணக்கம் மட்டும் தெரிவித்தார். அதற்கு பதிலுக்கு பிரதமர் கும்பிட்டார். வழக்கமாக ஓபிஎஸ், இபிஎஸ் பிரதமரை பார்க்க டெல்லி சென்றால் பிரதமர் மோடி அவர்களை கைக்குலுக்கி, கட்டி அணைத்து வரவேற்பது வழக்கம். ஆனால், வெறும் வணக்கத்துடன் எடப்பாடியை மோடி கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். இந்த சந்திப்பு என்பது ஒரு நிமிடம் தான் இருந்தது. இதை பார்த்து எடப்பாடி கடும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச நேரம் கேட்டு இருந்தார். அதற்கும் அவர்கள் இருவரும் நேரம் ஒதுக்கவில்லை. அவர்கள் எடப்பாடியை சந்திக்க விரும்பாதததால் தான் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பெருத்த ஏமாற்றம் தான் ஏற்பட்டது. மேலும் தனது பயணம் தோல்வியில் முடிந்து விட்டதே என்றும் அவர் கருதினார். இதனால், தனது பயணத்தை 3 நாட்களிலே முடித்து விட்டு நேற்று காலையில் அவசரம், அவசரமாக சென்னை திரும்பினார். பிற்பகலில் அவர் சென்னை வந்தார். இன்று நடைபெற உள்ள புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவையும் புறக்கணித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவசரம், அவசரமாக சென்னை திரும்பியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் குட்கா வழக்கு தொடர்பாக மாஜி அமைச்சர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவு, அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ், ஆர்பிஐக்கு கடிதம் எழுதியிருப்பது, நீதிமன்றத்தில் மேல் முறையீடு என்ற அடுத்தடுத்த சம்பவங்களால் எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட் அடைந்துள்ளார். அது மட்டுமல்லாமல் டெல்லி பயணமும் தோல்வி அடைந்ததால் தான் முன்கூட்டியே தனது பயணத்தை முடித்து கொண்டு சென்று திரும்பி விட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக இடைக்கால பொது செயலாளராக பதவியேற்று மேற்கொண்ட முதல் பயணம் தோல்வியில் முடிந்ததால் எடப்பாடியின் ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னைக்கு புறப்படுவதற்கு முன்பாக டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் டெல்லி வந்தேன்’ என்றார். அதிமுக வங்கிக் கணக்கை முடக்க வேண்டுமென ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த கேள்விகளை தவிர்க்க வேண்டும். அதற்கு தற்போது பதில் அளிக்க முடியாது என்றார்.