கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்தோம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.!!

டெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்கள் அளிக்கப்பட்ட நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. தேர்தல் பத்திர விவரங்களை சமர்பிக்க அவகாசம் கேட்ட ஸ்டேட் வங்கியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் வங்கி சமர்பித்தது. இந்த விவரங்களை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்த நிறுவனங்களின் விவரம் இடம் பெற்று இருந்தது. எனினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு கொடுத்தது என்ற விவரங்கள் இடம் பெறவில்லை.

அமித்ஷா விளக்கம்: இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம் என்றும், கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் கூறினார். அமித்ஷா கூறியதாவது:-

இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் கருப்பு பண புழக்கத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நான் மதிக்கிறேன்.எனினும், தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவே அதிக பலன் பெற்றதாக ஒரு பார்வை உள்ளது.

மீதமுள்ள தொகை எங்கே?: உலகிலேயே மிகப்பெரிய மோசடி திட்டம் இது என்று ராகுல் காந்தி பேசியிருக்கிறார். அவருக்கு இதை யார் எழுதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. பாஜக 6 ஆயிரம் கோடி அளவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றுள்ளது. ஆனால் மொத்த கட்சிக பெற்ற தொகை 20 ஆயிரம் கோடி அளவுக்கு உள்ளது. எனவே, மீதமுள்ள தொகை எங்கே சென்றது?.. இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக அரசுக்கு நெருக்கடி?: முன்னதாக எந்தெந்த கட்சிக்கு யார் – யார் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கினார்கள் என்பதை வெளியுலகிற்கு கொண்டு வரும் வகையில் தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக வரிசை எண்களை வெளியிட வேண்டும் என்று நேற்று உச்ச நீதிமன்றம் மற்றொரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

ஏனெனில், அரசியல் கட்சிகளில் அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜகவே உள்ளது. பாஜக சுமார் 6 ஆயிரம் கோடி அளவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்களின் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் என்பது பாஜக அரசின் மிகப்பெரும் ஊழல் திட்டம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.