உயர்நீதிமன்றத்தில் இன்று அ.தி.மு.க வழக்கு:தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் மீண்டும் கடிதம்..!!

அ.தி.மு.க- வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான இரு அணிகளும் சட்ட ரீதியாக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதில், வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அதிமுகவில் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், 11 அமைப்புச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தரப்பு, ஒற்றைத் தலைமை புயல் வீசியது முதல் வழக்கு தொடுப்பதும், தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதுமாக இருந்து வருகிறது. முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியிருந்த கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர்களைத் தவிர வேறு யாரும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்கக்கூடாது என்றும், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் தன்னிடம் தான் கட்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இன்று வரை அதிமுக கட்சியில் நான் ஒருங்கிணைப்பாளர் என்றும் மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது, இந்த புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் ஆகையால் அதை ஏற்கக்கூடாது என்றும் அந்த கடிதம் வாயிலாக பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.