குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை – திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை.!!

சமீப காலமாக குழந்தை திருமணம் தமிழ்நாட்டில் அதிகமாகிக் கொண்டே வருகிறது பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பை வைக்க விருப்பம் இல்லாமல் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரு பெண் குழந்தை காதல் வயப்பட்டால், அதைத் தடுக்க பெற்றோர்கள் அந்த பெண்ணிற்கு குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் உயிருடன் இல்லை எனினும் குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அப்பெண் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கின்றனர்.
குடும்பத்தில் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி உறவினர்கள் எவரேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்கள் இறப்பதற்கு முன் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பதற்காகவும் சில குழந்தைத் திருமணங்கள் செய்துவைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் ஒரு பெண் குழந்தை ஒரு ஆணிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டால், ‘வேறு வழி இல்லாமல்’ என்று கூறி அப்பெண் குழந்தைக்குப் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்று தகவல்கள் கூறுகிறது. மேலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் பொதுவெளியில் தெரியாமல் இது போன்ற குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
குழந்தை திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்..
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது. குழந்தைத் திருமண தடைச் சட்டம் 2006-ன் படி 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பதும் அதற்கு உறுதுணையாக இருப்பதும் திருமணத்தில் கலந்து கொள்வதும் சட்டபடி குற்றமாகும்.திருமணங்கள் கோவில்கள், திருமண மண்டபங்கள், தேவாலயங்கள், மசூதிகளில் நடைபெறுகின்றன எனவே மேற்கூறிய இடங்களில் திருமணம் நடைபெறுவதற்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் தேவாலயங்கள் மசூதிகள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் மணமக்களின் வயது சான்றிதழை (பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்) கட்டாயம் பெற வேண்டும். மேலும் பெண்ணிற்கு 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் நிறைவடைந்து உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் படி 2 வருடம் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். திருமண மண்டபம் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் அனைவருமே நமது சமுதாயத்தில் குழந்தை திருமணம் நடக்காமல் இருக்க சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்.
குழந்தை திருமணம் நடப்பது அல்லது அதற்கான ஏற்பாடுகள் செய்வது தெரிய வந்தால் குழந்தைகள் உதவி எண் 1098 என்ற எண்ணிற்கோ மற்றும் மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணிற்கோ தகவல் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 0431 2413796 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம். தங்களது விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பள்ளி தலைமையாசிரியர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் காவல் துறை அலுவலர்கள் அனைவரும் குழந்தை திருமணத்தை தடுப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்..