தமிழகம் முழுவதும் 51 இடங்களில் சீருடை அணிவகுப்பு- ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு..!

சென்னை : காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடை அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ்., நடத்துகிறது. இதில், தமிழக பா.ஜ.க  தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.கடந்த 1925-ல் விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடையுடன் அணிவகுப்பு நடத்த, நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.அதை தொடர்ந்து, 51 இடங்களில் அணிவகுப்பை நடத்த, ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடுகளை செய்து வருகிறது. அணிவகுப்பு நிறைவில் பொதுக்கூட்டமும் நடக்கவுள்ளது.அணிவகுப்பில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோரும் சீருடையில் பங்கேற்க உள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.