ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவார், பரூக் அப்துல்லாவை தொடர்ந்து கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு: இக்கட்டான சூழலில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் ஆலோசனை..!!

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவார், பரூக் அப்துல்லா இருவரும் விலகிய நிலையில், கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட மூவரும் பின்வாங்கிய நிலையில், சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதி முடிவடையும் நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது.

இதற்காக, ஆளும் பாஜ சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பிலும் வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் பாஜவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது. பாஜ தேசிய தலைவர் நட்டாவும், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பல்வேறு முக்கிய கட்சித் தலைவர்களுடன் பேசி ஆதரவு கேட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளைப் பொறுத்த வரையில், பொது வேட்பாளராக ஒருவரை மூத்த தலைவர் ஒருவரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த 15ம் தேதி டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனை நடத்த 22 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்ப்யு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்கூட்டத்தில் திமுக உட்பட 17 எதிர்க்கட்சிகளே பங்கேற்றன.

ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. ஆலோசனை கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ணா காந்தி ஆகியோர் பெயர்களை பொது வேட்பாளராக நிறுத்த மம்தா முன்மொழிந்தார். ஆனால், சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்டனர். இந்நிலையில், டெல்லியில் இன்று மீண்டும் 17 எதிர்க்கட்சிகளுடன் சரத் பவார் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சூழலில் பொது வேட்பாளருக்கு முன்ழொழியப்பட்ட 3வது நபரான கோபால கிருஷ்ணா காந்தியும் தேர்தலில் போட்டியிட நேற்று மறுத்துவிட்டார்.

இதுகுறித்து கோபால கிருஷ்ணா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக என்னை நிறுத்த முன்மொழிந்து, பல மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எனக்கு பெருமை சேர்த்துள்ளனர். நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தை ஆழமாகப் பரிசீலித்ததன் மூலம், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஒரு தேசிய ஒருமித்த கருத்தையும், தேசிய சூழ்நிலையையும் உருவாக்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்பதை நான் நினைக்கிறேன்.

இதை சிறப்பாக செய்ய என்னை விட சிலர் உள்ளதாக நான் கருதுகிறேன். அத்தகைய நபருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என கூறி உள்ளார். கோபால கிருஷ்ண காந்தியின் இந்த முடிவால், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்றைய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அசாசுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் பங்கேற்பதாக கூறி உள்ளது. அதே போல, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு பதிலாக, அவரது மருமகனும், திரிணாமுல் கட்சி எம்பியுமான அபிஷேக் பானர்ஜி பங்கேற்பார் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக முன்ழொழியப்பட்ட சரத்பவார், பரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ணா காந்தி ஆகியோர் தேர்தலில் நிற்க மறுத்துவிட்டதால், பாஜவில் இருந்து விலகி திரிணாமுலில் இணைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக திரிணாமுல் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு 3 முதல் 4 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மம்தா பானர்ஜிக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவரும் சின்ஹாவை நிறுத்த ஆதரவு தெரிவித்துள்ளதாகவவும் கூறப்படுகிறது. இன்று நடக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.