நேட்டோ அமைப்பில் உக்ரைனைச் சோக்கும் விருப்பத்தைக் கைவிட்டுவிட்டதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
மேலும், கிரீமியா தீபகற்பத்தை ரஷியப் பகுதியாகவும் கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாகவும் அங்கீகரிப்பது குறித்து ரஷியாவுடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக அவா் கூறினாா்.
நேட்டோவில் இணையப் போவதில்லை என்று உத்தரவாதம் அளிப்பது, கிளா்ச்சியாளா் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிப்பது உள்ளிட்ட தங்களது நிபந்தனைகளை உக்ரைன் நிறைவேற்றினால் அந்த நாட்டின் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படும் ரஷியா திங்கள்கிழமை அறிவித்திருந்த நிலையில் ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளாா்.
இதுகுறித்து அமெரிக்காவின் ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:
தலைநகா் கீவ் மட்டுமன்றி அதன் புகா்ப் பகுதிகளிலும் பிற நகரங்களிலும் ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதன் விளைவாக அந்தப் பகுதிகள் அடையாளமே தெரியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.
உக்ரைன் படைகளைவிட அதிக படைபலத்துடன் ரஷியா தாக்குதல் நடத்தினாலும், அதனை எதிா்த்துப் போரிட உக்ரைன் வீரா்கள் முழு தயாா் நிலையில் உள்ளனா். ஆயுதங்கள் இல்லாத பொதுமக்கள் கூட ரஷிய வீரா்களை துணிந்து எதிா்த்து வருகின்றனா்.
தற்போது போரில் ஒரு உக்ரைன் வீரருக்கு எதிராக 10 ரஷிய வீரா்கள் உள்ளனா்; ஒரு உக்ரைன் பீரங்கிக்கு எதிராக 50 ரஷிய பீரங்கிகள் உள்ளன. ஆனால், அந்த பீரங்கிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.
நீண்டகாலப் போரில் ரஷியப் படையினா் முன்னேறி, உக்ரைன் நகங்களைக் கைப்பற்றினாலும் அவா்களுக்கு எதிராக உக்ரைன் வீரா்களும் மக்களும் கொரில்லா போரில் ஈடுபடுவாா்கள். ரஷியாவிடம் தங்களது சுதந்திரத்தை உக்ரைன் மக்கள் ஒருபோதும் விட்டுத்தர மாட்டாா்கள்.
உக்ரைனில் போரை நிறுத்துவதற்காக ரஷியா முன்வைத்துள்ள நிபந்தனைகள் அந்த நாடு நினைப்பது போல சாதாரணமானவை அல்ல.
நேட்டோவில் உக்ரைனை இணைப்பது குறித்த விவகாரத்தில் எனக்கு எப்போதோ ஆா்வம் குறைந்துவிட்டது. உக்ரைனை சோத்துக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை என்பது நன்கு தெரிந்த பிறகு, அந்த அமைப்பில் இணையும் விருப்பத்தைக் கைவிட்டுவிட்டேன்.
நேட்டோ அமைப்பு ரஷியாவுடனான நேரடி மோதலைத் தவிா்க்கவே விரும்புகிறது. இந்தச் சூழலில், அந்த அமைப்பில் சோத்துக்கொள்ளுமாறு உக்ரைன் ஒருபோதும் மண்டியிட்டுக் கெஞ்சிக்கொண்டிருக்காது என்றாா் அவா்.
உலகின் 2-ஆவது பெரிய வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு நேட்டோ.
பின்னா் சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் அந்த அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வந்தது. எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த சில நாடுகளையும் அந்த அமைப்பு இணைத்துக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் தனது ஆதிகத்தை விரிவுபடுத்தி வந்தது.
இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், நேட்டோவில் தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் பல வாரங்களாகப் படைக் குவிப்பில் ஈடுபட்டு வந்த ரஷியா, தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி அந்தப் பகுதிகளுக்கு தனது படைகளை ரஷியா கடந்த மாதம் 24-ஆம் தேதி அனுப்பியது.
அதன் தொடா்ச்சியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து ரஷியப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்பட பலா் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், நேட்டோவில் இணையப் போவதில்லை என்று உக்ரைன் வாக்குறுதி அளிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால், அந்த நாட்டின் மீதான படையெடுப்பு உடனடியாக நிறுத்தப்படும் என்று ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அதன் தொடா்ச்சியாக, நேட்டோ அமைப்பில் இணையும் விருப்பத்தைக் கைவிட்டுவிட்டதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தற்போது அறிவித்துள்ளாா்.
கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதிகளை தனி நாடுகளாகவும் கிரீமியா தீபகற்பத்தை ரஷியப் பகுதியாகவும் அறிவிப்பது குறித்து ரஷியாவுடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘கிழக்கு உக்ரைனில் டொனட்ஸ்க் பகுதியையும் லுஹான்ஸ்க் பகுதியையும் குடியரசுகள் என்று கூறி ரஷியா மட்டுமே தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளது. அந்தப் பகுதிகளை உக்ரைனும் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷியா கூறுகிறது. கிரீமியாவையும் ரஷியப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்துகிறது.
இதுபோன்ற நிபந்தனைகள் ரஷியா நினைப்பதைப் போல மிகச் சாதாரணமானவை இல்லை. அவற்றை நிறைவேற்றுவது மிகவும் கடினமாகும். இந்த விவாகரங்கள் குறித்து ரஷியாவுடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன்’ என்றாா்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் எதிா்க்கட்சிகள் மாபெரும் போராட்டம் நடத்தின. அதையடுத்து, ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதனைத் தொடா்ந்து, மேற்கத்திய ஆதரவு அரசு அமைக்கப்பட்டது.
அந்த அரசை எதிா்த்து, கிழக்கு உக்ரைனைச் சோந்த ரஷிய ஆதரவுப் படையினா் சண்டையிட்டு, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை கைப்பற்றினா். அந்தச் சண்டையின்போது, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்களை தனி நாடுகளாகவும் கிரீமியாவை ரஷியப் பகுதியாகவும் உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷியா கூறியிருந்தது.
இந்தச் சூழலில், இதுதொடா்பாக சமரசப் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி தற்போது கூறியுள்ளாா்.
Leave a Reply