ரஷ்யாவின் மிரட்டல்களுக்கு உக்ரைன் அரசு பணியாது என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சிறிய நகரங்களை தன்வசப்படுத்திய ரஷ்ய படைகள் தற்போது தலைநகர் கீவ்-வை சுற்றிவளைத்து நிற்கிறது. நகரில் ஒரு வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கீவ் நகரில் புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகம் ஏவுகனைகளை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டதால் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மற்றொரு நகரான மரியுபோலிலும் அதி தீவிரமாக சண்டை நடைபெற்றுவருகிறது.
இப்படி முக்கிய நகரங்களை சுற்றிவளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்நகரங்களில் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய நேற்று வரை ரஷ்ய கெடு விதித்திருந்தது. இந்த நிலையில் ரஷ்யா விடுக்கும் இறுதி எச்சரிக்கைகளை ஏற்கமுடியாது என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் மக்கள் சரணடைய மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுடன் எந்த போர் நிறுத்தம் செய்து கொள்வதாக இருந்தாலும் அது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டே முடிவெடுக்கப்படும் என்றும் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
Leave a Reply