உக்ரைன் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு: ஐ.நா, உலக நாடுகள் கருத்து.!!

ரஷ்யா ரசாயனம், உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே உக்ரைன் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த இருப்பதாகவும் இதற்கான ஆய்வகங்கள் உக்ரைனில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருப்பதாக ஐநா, உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

உக்ரைன் ரசாயன ஆய்வகங்களை அமைத்துள்ளதாகவும் அதனால் ரசாயன ஆயுத தாக்குதலில் ஈடுபட கூடும் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. இதனை மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்யா பிற நாடுகள் மீது கூறும் குற்றச்சாட்டுகளில் இருந்து அந்நாட்டின் திட்டங்களை அறிய முடியும் என்று கூறப்படுவதுண்டு. அதன்படி, தற்போது உக்ரைன் மீது குற்றம் சாட்டி, ரசாயன ஆயுதம் பயன்படுத்தும் தனது சதி திட்டத்தை ரஷ்யா மறைமுகமாக தெரிவித்துள்ளது.

ரசாயன ஆயுதம் போன்ற பேரழிவை ஏற்படுத்தும் எந்த விதமான ஆயுதங்களும் உக்ரைனில் உற்பத்தி செய்யப்படவில்லை,” என்று தெரிவித்தார். இதனிடையே, உக்ரைன் நாட்டில் ராணுவ உயிரி ஆயுதம் மூலம் தாக்குவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. அமெரிக்காவின் ஆதரவுடன் உக்ரைன் ரசாயன ஆயுதங்களை தயாரிப்பதாகவும் ரசாயனம், உயிரி ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரிய ஷாகரோவா தெரிவித்தார். இதனை அமெரிக்கா மறுத்தது. இதையடுத்து, இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க ஐநா.வுக்கான ரஷ்யாவின் நிரந்தர துணை தூதர் டிமிட்ரி போல்யன்ஸ்கி, கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி தனது டிவிட்டரில், “இது உக்ரைன் மீதான தங்களது திட்டமிட்ட, முறையற்ற போரை நியாயப்படுத்தும் ரஷ்யாவின் சதி திட்டமாகும்,” என்று கூறினார். அதே நேரம், ஐநா.வுக்கான ரஷ்யாவின் மற்றொரு துணை தூதர் டிமிட்ரி சுமகோவ், உக்ரைனில் அமெரிக்கா செயல்படுத்தும் ரகசிய உயிரி ஆயுத ஆய்வகங்கள் பற்றி ஐநா. விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், இது குறித்து விசாரணை எப்போது தொடங்கும் என்பது பற்றி ஐநா. தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், “ரசாயான ஆயுத்ததை உக்ரைன் பயன்படுத்த இருப்பதான கட்டுக் கதை ரஷ்யாவின் விளையாட்டுகளில் ஒன்று. ரஷ்யாவின் இந்த விளையாட்டை சிரியா விவகாரத்தில் இங்கிலாந்து பார்த்துள்ளது. இது போன்ற குற்றச்சாட்டு ரஷ்யாவுக்கு வழக்கமான ஒன்று. ரஷ்யா ஒரு இழிவான, காட்டுமிரண்டித் தனமான அரசாக செயல்படுகிறது,” என்று தெரிவித்தார்.