தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வருகை…

 இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வர உள்ளனர். இது நாடு முழுவதும் தேர்தல் ஆயத்தம் குறித்த மூவர் குழுவின் ஆய்வின் தொடக்கமாக இருக்கும். இந்தியாவில் இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் ஜனவரி 7,8-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஆய்வு செய்ய உள்ளனர்.தொடர்ந்து ஜனவரி 9,10-ம் தேதிகளில் ஆந்திராவில் ஆய்வு செய்கின்றனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆந்திராவில் மக்களவைத் தேர்தல் உடன் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்தும் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்த பின் மார்ச் 10-ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.