பள்ளி மாணவ, மாணவியர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை – பாஜக விளக்கம்.!!

பிரதமர் மோடி கோவையில் பங்கேற்ற, ‘ரோடு ஷோ’வில், பள்ளிக் குழந்தைகள், ஆர்வம் மிகுதியால் தாங்களாகவே பங்கேற்றனர், கட்சி சார்பில் பங்கேற்க செய்யவில்லை’ என, தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ.க விளக்கம் அளித்து உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி, கோவையில் கடந்த 18 ல் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பலரும் பிரதமரை நேரில் காணும் ஆர்வத்தில், வருகை தந்தனர். இவர்களில் பள்ளி மாணவ, மாணவியரும் பங்கேற்றதாக, பா.ஜ.க கட்சியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியது.

பிரதமரை நேரில் காணும் ஆர்வத்தில், பள்ளி மாணவ — மாணவியர் தாங்களாகத் தான் பங்கேற்றனர்; அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடவில்லை’ என்று, கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், கோவை வடக்கு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷுக்கு விளக்கம் அளித்து உள்ளார்.

இதற்கிடையே, கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள, அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், 50 க்கும் மேற்பட்டோர் பிரதமர் ரோடு ஷோவில், ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறை துணை கமிஷனரிடம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிக்கை கேட்டு இருந்தார்.

இந்நிலையில், சாய்பாபா கோவில் போலீசார், அப்பள்ளி நிர்வாகத்தின் மீது, குழந்தைகளை தவறாக வழி நடத்துதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதே போல, பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றதாக, வடவள்ளி சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு, தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் செந்தில், நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.