அய்யப்பன்தாங்கல் அருகே மழைநீர் வடிகால் கட்ட எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்…

அய்யப்பன்தாங்கல் அருகே மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியல் ஈடுபட்டனர். அய்யப்பன்தாங்கலில் இருந்து பரணிபுத்தூர் செல்லும் சாலையில் கொளுத்துவான்சேரி பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மாங்காடு போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து வந்து கூட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். அதன் பிறகு, போலீசாரின் அறிவுரை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறிய போது :-
எங்கள் பகுதியில் ஏற்கனவே கட் அண்ட் கவர் வடிகால் அமைக்கப்பட்டு மழைநீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக சாலையின் நடுவே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்போது இச்சாலை முடக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த வடிகால் பணி முடிந்தால் சாலை உயரமாகிவிடும். இதனால் மழை பெய்யும் போது, தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்புகளில் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது இந்த மழைநீர் வடிகால் கட்டுவது எந்த துறையைச் சேர்ந்தவர்கள் என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவித்து, எங்கள் பகுதிக்கு பாதிப்பு இல்லாத வகையில் வடிகால் கட்ட நடவடிக்கை வேண்டும் என்றனர். பொதுமக்கள்