புள்ளிமானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற இருவர் கைது- பவானிசாகர் வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான புள்ளி மான்கள் நடமாடுகின்றன.  வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புள்ளி மான்கள் அவ்வப்போது விவசாயத் தோட்டங்களில் நுழைவது வாடிக்கையாக உள்ளது.  பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய  புள்ளிமான்கள் அப்பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரை ஓரத்தில் நடமாடின. ஆற்றோரத்தில் நடமாடும் புள்ளி மான்கள் வேட்டையாடப்படுவதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது புதர் மறைவில் இரு நபர்கள் புள்ளிமான் இறைச்சியை விற்பனை செய்வதற்காக கூறு போட்டுக் கொண்டிருந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது பவானிசாகர் குடில் நகர் பகுதியைச் சேர்ந்த ஓதிச்சாமி (58), தினேஷ்குமார்  (46) இருவரும் சேர்ந்து ஆற்றங்கரை ஓரத்தில் நடமாடும் புள்ளி மான்களை சுருக்கு கம்பி வைத்து வேட்டையாடி மானின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர்  இருவர் மீதும் வன குற்ற வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து மான் இறைச்சி,  வேட்டையாட பயன்படுத்துவதற்கு தேவையான சுருக்கு கம்பிகள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர்..