திருச்சி மாநகராட்சி முன் தள்ளுவண்டி வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம்.!!

திருச்சி மாநகா் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் சாலையோரத்தில் பூ, பழம், காய்கறி உள்ளிட்டவற்றை வைத்து விற்ற தள்ளுவண்டிகளை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினா் ஆக்கிரமிப்புகள் எனக் கூறி அகற்றினா். இதேபோல திருச்சி தெப்பக்குளம், மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம், உள்ளிட்ட பல பகுதிகளில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, காவல் துறை இணைந்து தெருவோர வியாபாரத்தை நடத்த விடாமல் தடை செய்கின்றனர் . இதைக் கண்டித்தும், சுப்ரமணியபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடைகளை அகற்றியோா் மீது உயா் நீதிமன்ற உத்தரவை மீறுதல், சொத்துகளைச் சேதப்படுத்துதல், வியாபாரிகளைத் தாக்கிக் காயப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் எனவும், பாதிப்புக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரி திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் முன் வியாபாரிகள், அரசியல் கட்சியினருடன் இணைந்து ஒப்பாரி போராட்டம் மேற்கொண்டனா்.
மாா்க்சிஸ்ட் பொன்மலை பகுதிச் செயலா் விஜேந்திரன் தலைமை வகித்தாா். போராட்டம் குறித்து மாநகா் மாவட்டச் செயலா் ராஜா விளக்கினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வெற்றிச்செல்வன், காா்த்திகேயன், லெனின், மணிமாறன், தரக்கடை சங்க மாவட்டச் செயலா் செல்வி, மாவட்டத் தலைவா் கணேசன் ஆகியோா் பேசினா். திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனா். இந்தப் போராட்டத்தினால் மாநகராட்சி முன் உள்ள கண்டோன்மெண்ட் பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.