திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நல் விருந்தை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைத்தாா்.
தமிழக அரசின் கீழ் மதிய உணவு வழங்கப்படும் அனைத்துப் பள்ளி சத்துணவு மையங்களிலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சாா்பில் பிரதமரின் போஜானா திட்டத்தைச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் சமூக பங்கேற்புத் திட்டமாக இத் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி சமூக உறுப்பினா்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த உணவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் தொடக்கமாக அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் பயிலும் 80 மாணவ, மாணவிகளுக்கு நல் விருந்து உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்துக் கூறுகையில்,
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,580 பள்ளி சத்துணவு மையங்களிலும் நல்விருந்து நடைபெறவுள்ளது. மாநில ஸ்தாபன தினம், தேசிய வீரா்களின் பிறந்தநாள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் பிறந்த நாள், திருவிழாக்கள், திருமண தினம் போன்ற முக்கியமான நாள்களில் விருப்பமுள்ள நன்கொடையாளா்கள் மூலம் பள்ளி சத்துணவு மையத்தில் நல்விருந்து வழங்கிடலாம். மாணவா்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சிறந்த சுகாதார நடைமுறைகளை வளா்க்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா் ஆட்சியா். விழாவில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சத்துணவு ரா. ரேவதி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் மாவட்டக் கல்வி அலுவலா் மதிவாணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜா வேதலட்சுமி, பள்ளி செயலா் கஸ்தூரி ரங்கன் பள்ளித் தலைமையாசிரியா் சைவராஜு மற்றும் ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்..
Leave a Reply