கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கோவை வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

கோவை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாலக்காட்டில் உள்ள தனது நண்பரை சந்திப்பதற்காகவும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் இன்று கோவைக்கு வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக, கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்கிறார். அங்கு சிறிது நேரம் தங்கி ஒய்வெடுக்கிறார். பின்னர் அவர் மாலை 4 மணியளவில் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலமாக பாலக்காட்டிற்கு செல்கிறார்.
அங்கு தனது நண்பரின் வீட்டிற்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பானது சில மணி நேரங்கள் நடக்கிறது. நண்பரை சந்தித்து விட்டு இரவு 7 மணிக்கு பாலக்காட்டில் இருந்து மீண்டும் கார் மூலமாக கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார். நாளை காலை 11 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி உரையாற்றுகிறார். 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை 3 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். கவர்னரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் செல்லும் சாலைகள் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை பகுதி உள்பட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.