குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு.!!

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுடன் முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் மற்றும் ராணுவம்-கடற்படை-விமானப் படை தலைமைத் தளபதிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

இச்சந்திப்பில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து குடியரசுத் தலைவரிடம் அவா்கள் விளக்கமளித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்றது.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக ராஜீய ரீதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, 9 இடங்களில் இந்திய ராணுவம் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல் (ஆபரேஷன் சிந்தூா்) மேற்கொண்டது. இதில் பயங்கரவாதத் தளங்கள் தகா்க்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் நிகழ்ந்தது. பாகிஸ்தானின் விமானப் படை தளம் உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கி அழித்தது. இதையடுத்து, சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் அழைப்பு விடுத்தது. இரு ராணுவத்தினரும் உடன்பாடு மேற்கொண்டதையடுத்து, கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, விமானப் படை தலைமைத் தளபதி அமா்பிரீத் சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி ஆகியோா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் புதன்கிழமை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விளக்கமளித்ததாக எக்ஸ் வலைதளத்தில் குடியரசுத் தலைவா் மாளிகை பதிவிட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கான இந்தியாவின் பதிலடி நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட ஆயுதப் படையினரின் துணிவையும் அா்ப்பணிப்பையும் குடியரசுத் தலைவா் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.