டெங்கு பாதிப்பால் அடுத்தடுத்து கல்லூரி மாணவி, பெண் உயிரிழந்த சோகம்..

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

குருமாம்பேட் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூலம் என்பவரின் மகள் காயத்ரி. 19 வயதான இவர், கிருமாம்பக்கத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், மூலக்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8:30 மணிக்கு அவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாணவி இறந்த தகவலறிந்த கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் குருமாம்பேட்டில் வைக்கப்பட்டிருக்கும் மாணவி காயத்ரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் தருமாபுரி நடுத்தெருவைச் சேர்ந்த வினோத் என்பவருடைய மனைவி மீனா ரோஷினி என்ற 28 வயதுப் பெண், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 8-ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் புதுச்சேரியில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்திருக்கும் நிலையில், மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வோர் ஆண்டும் பருவமழை சீசன் துவங்குவதற்கு முன்னர் மற்றும் பின்னர் நாட்டில் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் இந்த நோய்கள் வராமலும், பரவாமலும் தடுக்கலாம். இந்த நோய்களைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மிகவும் கடுமையாகப் போராடி வருகிறது.

நேற்று புதுச்சேரி தருமாபுரியைச் சேர்ந்த மீனா ரோஷினி என்ற பெண் டெங்குவால் உயிரிழந்ததாக இயக்குநர் அலுவலகத்துக்குத் தகவல் கிடைத்தவுடன், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் அறிக்கையின்படி அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 04.09.2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக 08.09.2023 அன்று கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அன்றே ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி 12.09.2023 மரணமடைந்தார்.

அதேபோல குருமாம்பேட்டையைச் சேர்ந்த 19 வயதுப் பெண் காயத்ரி 10.09.2023 அன்று காய்ச்சலுக்காக தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை பலனின்றி 13.09.2023 அன்று அவர் மரணமடைந்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.