கோவை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா- திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்..!

கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியில் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 60 அடி நீளத்தில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி 327-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மனுக்கு அபிரேஷக ஆராதனைகள் நடந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி கோவிலின் முன்பு 60 அடி நீளத்துக்கு குண்டம் வளர்க்கப்பட்டிருந்தது. உக்கடம் விநாயகர் கோவிலில் இருந்து அன்னபட்சி வாகனத்தில் திரவுபதியம்மன் எழுந்தருள செய்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். அதை தொடர்ந்து குண்டத்தில் முதலில் கோவில் தலைமை பூசாரி கிருஷ்ணமூர்த்தி சுவாமி இறங்கினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினர். அதன் பின்னர் இரவு 9 மணியளவில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை, நாளை  (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு போத்திராஜா காவுகொள்ளுதல், 23-ந் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.