இந்தியாவில் விற்பிங்க; வேலை மட்டும் சீனர்களுக்கா..எலான் மஸ்கிடம் கெடுபிடி காட்டும் மத்திய அரசு.!!

டெஸ்லா காரை விற்பதற்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை பயன்படுத்துவார்கள், வேலைவாய்ப்பை மட்டும் சீனாவுக்கு வழங்குவீர்களா.

டெஸ்லா காருக்கு எந்தவிதத்திலும் சலுகைகள் தரப்படாது என எலான் மஸ்கிற்கு மத்தியஅரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் நிறுவனம் டெஸ்லா எனும் எலெக்ட்ரிக் கார் கடந்த ஆண்டு ஜனவரியில் பெங்களூருவில் பதிவு செய்தது. இந்தியாவில் வரிகள் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்து வரியைக் குறைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, இந்தியாவில் டெஸ்டா எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைத்தால் அதற்கேற்ப வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தெரிவித்தது.

ஆனால், டெஸ்லா நிறுவனமோ, ” தொழிற்சாலை அமைக்க இப்போதைக்கு சாத்தியமில்லை. ஏராளமான முதலீடுகள் சீனாவில் செய்யப்பட்டுவிட்டதால், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்கிறோம்” என மத்திய அரசிடம் தெரிவித்தது.

ஆனால், அதற்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து, வரிச்சலுகை அளிக்க முடியாது எனத் தெரிவித்தது.
இந்நிலையில் நெட்டிஸன் ஒருவர், எலான் மஸ்க்கிற்கு டேக் செய்து, “டெஸ்லா இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அப்டேட் ஏதேனும் உள்ளதா? ” என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “இந்திய அரசுடன் இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம்” என்று மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மஸ்க்கின் இந்த அதிருப்தியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றாலும் டெஸ்லாவை வரவேற்பதில், டெஸ்லா ஆலையை தங்கள் மாநிலத்தில் அமைக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்க 5 மாநில அரசுகள் தயாராகி இருக்கின்றன.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, “டெஸ்லா நிறுவனத்துக்கு வரிச்சலுகை அளிக்கும் திட்டம், இறக்குமதி சலுகை அளிக்கும் திட்டம் இருக்கிறதா” என்ற கேள்வியை காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் எழுப்பினார்.

இதற்கு மத்திய கனரக தொழில்துறை இணைஅமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் பதில் அளித்தார். அவர் பேசுகையில் ” இதுவரை அமெரிக்க நிறுவனமான டெஸ்லா இந்திய அரசின் கொள்கைகளுக்கு உட்பட்டு நிறுவனம் அமைக்க விண்ணப்பிக்கவில்லை.

இறக்குமதி வரி கோரி மட்டும் கேட்டுக்கொண்டது. ஆனால், தொழிற்சாலை அமைத்தால்தான் வரிச்சலுகை அளிக்க முடியும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மத்திய அரசு உற்பத்தி அடிப்படையில் சலுகைகள் வழங்குகிறது.

அதிலும் பேட்டரி உற்பத்தி, ஆட்டமொபைல் உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்புக்கு அதிகமான சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி உள்நாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை சீனாவில் அமைக்கிறது, அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஆனால், காரை தயாரித்து விற்பதற்கு மட்டும் இந்தியாவைப் பயன்படுத்துகிறது. மோடி அரசில் இது சாத்தியமில்லை.

இந்தியச் சந்தையைப் பயன்படுத்த வேண்டுமென்றால், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இந்தியர்கள் பணம் சீனாவுக்கு செல்லக்கூடாது. இந்திய சட்டத்துக்கு உட்பட்டு விண்ணப்பிக்கும்போது கதவுகள் திறந்தே இருக்கும். இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து இந்தியர்களுக்கு வேலை கொடுங்கள், அரசின் வருமானத்தைப் பெருக்குங்கள். இவ்வாறு அமைச்சர் கிருஷ்ணன் தெரிவித்தார்