வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் உள்ள 1 லட்சம் மின்வாரிய ஊழியர்கள்- கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!

கோவை மாநகராட்சி 63-வது வார்டில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் தங்களது குறை சம்பந்தமான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் 846 இடங்களில் மக்கள் சபை கூட்டம் இன்று நடக்கிறது.இக்கூட்டத்தில் பொது மக்களின் குறைகளை கோரிக்கையாக பெற்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் ரூ.211 சாலை பணிகள் தொடங்கப்பட்டு சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சிறப்பு நிதியாக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.26 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு வருகிறது. மீதமுள்ள பழுதடைந்த சாலைகளும் சீரமைக்கப்படும். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது.

வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்‌.சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மின்வாரியம் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. பாரதீய ஜனதா தமிழக தலைவர் அரசியல் கோமாளி.அவர் தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்பதை தவிர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கிராம சபை போல நகர்ப்புற பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இக்கூட்டம் நடைபெறுகிறது.ஒரு வருடத்திற்கு 6 கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மக்களுக்கு இந்த வாய்ப்பு உள்ளது. வார்டு குறைகளை எடுத்துச் சொல்லி தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் தேவை அறிந்து செயல்படுத்தும் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், அடித்தட்டு மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடங்கி மக்களின் வாழ்வை மேம்படுத்தி உள்ளார். ஆளுங்கட்சி. எதிர்க்கட்சி என வித்தியாசம் பார்க்காமல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் 10 கோரிக்கைகளை கேட்டு, நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார். எனவே அனைவரும் முதல் அமைச்சருக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக், முன்னாள் எம்.பி. நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.